தாய்லாந்து ராமாயணம்
ஆனந்த் ராகவ்
கிழக்கு பதிப்பகம்
New Horizon Media Pvt. Ltd.,
No.33-15. Eldams Road
Alwarpet, Chennai-600 018.
Ph: 24009601/03/04
விலை ரூ.100/-
பலநூறு சிறுகதைகளையும் நாவல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன இதிகாசங்கள். எத்தனை கதைகள், கிளைக் கதைகள்!
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கதை கூறுகின்றன இதிகாசங்கள். ஹனுமானின் குறும்புத்தனங்களை குழந்தைகள் ரசிக்கவும் முடிகிறது; தசரத - ராமன் பிரிவினை பெரியவர்கள் உணரவும் முடியும். சம்பவங்களை வைத்து வாதவிவாதங்களும் செய்ய முடியும். பல மந்திர கதைகளையும் நீதிபோதனைகளையும் இதிகாசங்கள் உள்ளடக்கி உள்ளன. இத்தகைய இதிகாசங்கள் நாட்டின் வரலாற்றையும் கூட நிர்ணயிக்க முயல்கின்றன.
இந்தியாவின் மிகப்பெரும் இதிகாசங்களாக மதிக்கப்படும் மகாபாரதமும் இராமாயணமும் இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமானது என பொதுவாக நம்பப்பட்டது. வட இந்தியாவில் வாழும் பலருக்குத் தென் இந்தியாவில் இருக்கும் இராமாயணங்கள் இன்றும் ஆச்சரியம் தருகின்றன. இந்நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவி இன்றும் செழித்துள்ள ராமாயணம் பற்றி ராமகியன் என்ற நூல் எடுத்துரைக்கிறது.
நூலின் தலைப்பைப் பார்த்தவுடன் ஆர்வமாகப் படிக்கத் தோன்றுகிறது. நூலின் உள்ளடக்கத்தில் 16 தலைப்புகளில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. உள்ளடக்கத்தை மூன்றாகப் பிரிக்கலாம்.
1) ராமகியனின் வரலாறு மற்றும் கதை
2)ராமகியனில் உள்ள பாத்திரங்களின் நிகழ்ச்சிகளின் மாற்றங்களை மற்ற இராமாயணங்களோடு ஒப்பிடுதல்
3) பிறதென்கிழக்காசிய இராமாயணங்களை அறிமுகம் செய்தல்.
இந்தியாவின் தொடர்பால் கி.பி. முதல் நூற்றாண்டிலேயே வாய்மொழியாக இராமாயணம் தாய்லாந்தில் அறிமுகமாகிவிட்டது. பின்னர் வந்த ஆண்டுகளில் பல மன்னர்களால் பல்வேறு உருவ, உள்ளடக்க மாற்றங்கள் பெற்று இறுதியாக ராமகியன் உருவாகியிருக்கிறது.
இலக்கியங்கள் ஒவ்வொரு இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களைத் தாங்கி வருகின்றன எனும் வகையில் இராமாயணமும் நாட்டுக்கு நாடு, ஒவ்வொரு காலத்திலும் மாறுபட்டுள்ளது என ஆசிரியர் கூறுகிறார். அவற்றுக்கான சான்றுகள் நூல் முழுமையும் விரவிக் காணப்படுகின்றன.
இந்துமத அடிப்படையிலான இராமாயணத்தை மட்டும் மூலமாகக் கொள்ளாமல் சமண, பெளத்த ராமாயணங்களின் மாற்றங்களையும் ராமகியன் கொண்டுள்ளதாக ஆசிரியர் கூறுகிறார். ராமகியனில் விஷ்ணுவின் அவதாரமான ராமனையும் சீதையையும் சேர்த்து வைப்பவராக சிவன் தோன்றுகிறார். சமண, பெüத்த இராமாயணங்களைப் போல தெய்வ அவதாரமாக அன்றி ராமகியனில் பாதிக்கும்மேல் ராமன், சீதை பாத்திரங்கள் மானுடத் தன்மையில் படைக்கப் பட்டிருக்கின்றன. ராமனுக்கு சீதை தங்கை, ராமனுக்கு அனுமன் தந்தை, ராவணனுக்கு சீதை மகள் போன்றஅதிர்ச்சி தரும் உறவு முறைகள் போன்ற செய்திகள் இந்நூலில் காணப்படுகின்றன.
இன்றும் தாய்லாந்து கலாச்சார விழாக்களில் 'கோன்' முகமூடி அணிந்து நாடகமாக ராமகியன் என்ற தாய்லாந்து இராமாயணம் நடிக்கப்படுகிறது. தாய்லாந்து மன்னர்கள் 'ராமா' என்று அழைக்கப்படுவதும் தாய்லாந்தின் தலைநகர் முன்பு அயுத்தயா என்று அழைக்கப்பட்டதும் அந்நாட்டின் மீது உள்ள இராமாயணத்தின் மீதான தாக்கத்தைக் காட்டுகிறது. மலேசியா, இந்தோனேஷியா போன்ற இஸ்லாமைப் பின்பற்றும் நாடுகளிலும் இராமாயணங்கள் மாற்றங்களுடன் நிலைத்து நிற்கின்றன.
இந்திய ராமாயணத்தை ஒட்டி 6 காண்டங்களாகப் பிரிந்திருப்பினும் மத அடிப்படையில் முக்கியத்துவம் கொடுக்காதது இந்த தாய்லாந்து ராமகியன் என்கிறார் ஆசிரியர்.
ராமகியனின் கதையைக் கூறும் போதும் சரி, பாத்திரங்களைப் பற்றி அலசும்போதும் சரி மற்ற எல்லா இராமாயணங்களையும் முன்னெடுத்து வேறுபடுத்துகிறார் ஆசிரியர். இந்திய இராமாயணத்தை (இந்துமத அடிப்படை) மட்டும் அறிந்தவர்களுக்கு இந்தியாவின் மற்ற இராமாயணங்களையும் தென்கிழக்கு ஆசிய ராமாயணங்களையும் சேர்த்து அறிமுகம் செய்திருக்கிறார் ஆசிரியர்.
லாவோஸ், கம்போடியா முதற்கொண்டு ஜப்பான் இராமயணம் வரை சுருக்கமாக இடம் பெற்றிருக்கின்றன. நூலின் முற்பகுதியில் ராமகியனின் சிறப்புகளைக் கூறும் போதும் ஆசிரியர் மேற்கண்ட இராமாணங்களை சுட்டிக்காட்டுகிறார். இதனால் கூறியதுகூறல் இடம்பெறுகிறது. வாசகனின் புரிதல் சரியாக அமையவென ஆசிரியர் இவ்வாறு செய்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.
சுருக்கமான உட்தலைப்புகளில் எளிமையாக கட்டுரைகள் அமைந்துள்ளன. ராமகியனின் தாய்லாந்து மூலத்தையும் அதன் மொழி பெயர்ப்பும் சில இடம் பெற்றிருந்திருக்கலாம்.
கம்பராமாயணத்திற்கு முன்னர் தமிழில் இராமாயணம் இருந்துள்ளது என மயிலைசீனி வேங்கடசாமி கூறுவார். அத்தகைய பாடல்கள் புறநானூறு (378) அகநானூறு (70) பாடல்களில் அமைந்திருப்பதைக் காண்கிறோம். இந்திய மொழிகளில் உள்ள ராமாயணங்கள் பற்றியும் ஆய்வுகள் நடந்துள்ளன. இந்த வகையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் இராமயணங்களைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்திருக்கிற நூலாக அமைகிறது ராமகியன்.