அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தைப் படித்ததன் மூலம் தென்னக வரலாற்றின்பால் மாளாத
காதல் கொண்ட இளைஞர்களால் உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவையும் (http://groups.yahoo.com/ group/ponniyinselvan) பழங்கோயில்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரீச் நிறுவனமும் (http://templesrevival.blogspot.com) இணைந்து கடந்த ஆகஸ்ட் 15 அன்று சென்னையில் வரலாற்றுக்காக ஒரு தனிப்பெரும் விழா எடுத்துச் சிறப்பித்தனர். "பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பெருவிழா'' என்கிற பெயரில் நடைபெற்ற இத்திருவிழா இரண்டு நிகழ்ச்சிகளாக, காலையில் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையிலும் மாலையில் பாரதீய வித்யா பவனிலும் நடைபெற்றன.
காலையில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்துவும் கல்கி ஆசிரியர் திருமதி. சீதாரவியும் தென்னகத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் முன்னாள் தலைவரும் ரீச் நிறுவனத்தின் இயக்குனருமான திரு. தியாக சத்தியமூர்த்தியும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாலையில் நடைபெற்ற கல்கி கலந்துரையாடலில் வரலாற்றுப் புதின ஆசிரியர் விக்கிரமனும் திருமதி.கௌரி இராம்நாராயண் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
விழா காலை 9.30 மணிக்கு திருமதி.சீதாரவியும், வைரமுத்து மற்றும் பேரவையின் முக்கிய ஒருங்கிணைப்பாளரும் கட்டுமானத் தொழிலதிபர் திரு சுந்தர் பரத்வாஜøம் குத்து விளக்கேற்றி வைக்க இனிதே துவங்கியது. முதல் நிகழ்ச்சியாக "ஒரு வரலாற்றுப் பேரவையின் வரலாறு'' எனும் தலைப்பில் கோகுல் சேஷாத்ரி பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை உருவான கதையை சுருக்கமாக முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து விழாவிற்காக உருவாக்கப்பட்டிருந்த சிறப்பு வரலாற்று மலரைத் திருமதி. சீதாரவி வெளியிட, கவிப்பேரரசு பெற்றுக் கொண்டார். வரலாற்றாய்வில் பழம் தின்று கொட்டை போட்ட அறிஞர்கள் முதல் வரலாற்றைப் பயிலத் தொடங்கியிருக்கும் இளைஞர்கள் வரை பலரது படைப்புக்களையும் தாங்கி வெளி வந்திருக்கிறது இச்சிறப்பு மலர்.
இதற்கடுத்ததாகப் பேரவையின் உறுப்பினர்களாக விளங்கும் அடுத்த தலைமுறை வரலாற்றுப் புதின ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவர்களுள் பல வரலாற்றுப் புதினங்கள் எழுதியுள்ள திரு. விஷ்வக்úஸனன், கல்கியின் சிவகாமியின் சபதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள செல்வி. பவித்ரா, இராஜகேசரி மற்றும் பைசாசம் முதலான நாவல்களைப் பதிப்பித்துள்ள வரலாறு டாட் காம் (http://www.varalaaru.com) மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவரான கோகுல் சேஷாத்ரி பொன்னியின் செல்வன் நாவலின் தொடர்ச்சியாகக் காவிரி மைந்தன் எனும் புதினத்தைப் படைத்துள்ள திரு. அனுஷா வெங்கடேஷ், வம்சதாரா - திருமலைத் திருடன் - எம்டன் முதலான நாவல்களைப் படைத்துள்ள திரு.வி.திவாகர், தண்டி யாத்திரை எழுதியுள்ள திரு.முருகானந்தம் முதலியோர் அடக்கம். வழக்கமான பொன்னாடையுடன் சிறப்புப் பரிசாக இவ்விழாவிற்கென்வே உருவாக்கப்பட்ட சோழ மாமன்னன் இராஜேந்திர சோழனின் கரந்தைச் செப்பேடுகளின் முன் காணப்படும் சோழர் கால இராஜமுத்திரையின் மாதிரி இவர்களுக்கு அளிக்கப்பட்டது தனிச்சிறப்பு.
சிறப்புரை நிகழ்த்திய சீதாரவி, தமது தந்தையாரும் கல்கியின் முன்னாள் ஆசிரியருமான திரு.கல்கி இராஜேந்திரன் இவ்விழாவிற்காக எழுதி அனுப்பிய வாழ்த்துரையை வாசித்தார்.
விழாவின் அடுத்த பகுதியாக பல்வேறு ஆய்வாளர்களின் ஆய்வுரைகள் பிரம்மாண்டமான திரையில் ஒலி ஒளிக்காட்சியாக நிகழ்த்தப்பட்டன. ஆதிச்ச நல்லூரின் தொன்மையை திரு.தியாக சத்தியமூர்த்தி திறம்பட எடுத்துரைத்தார். அங்கு அகழ்வாய்வு மேற்கொள்ளப் பட்ட பரப்பளவு மிகக் குறைவே என்றும் அந்தக் குறுகிய பரப்பளவிற்குள்ளேயே ஏராளமான பழங்காலப் பொருட்கள் கிடைத்துள்ளன என்பதையும் குறிப்பிட்டார். இதற்கடுத்ததாக உரை நிகழ்த்திய திரு. பி.எஸ்.ஸ்ரீராமன் தஞ்சை இராஜராஜீஸ்வரத்தில் காணப்படும் சோழர்கால ஓவியங்களின் அழகைக் கோடிட்டுக் காட்டினார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலையின் பணிபுரியும் திரு. வீ.செல்வகுமார் காவிரி டெல்டா பகுதிகளின் தொல் பழங்காலத்தை எடுத்துரைத்தார். இப்பகுதியில் சங்க காலம் துவங்குவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நாகரீகத்தின் நிழல் படியத் துவங்கிவிட்டது என்றார். சங்ககால முருகன் திருக்கோயில் எனும் தலைப்பில் நீண்டதொரு உரை நிகழ்த்திய ஆய்வாளர் திரு. எஸ்.இராஜவேலு, மாமல்லபுரத்தில் சமீபகால அகழ்வாய்வில் வெளிப்பட்ட முருகன் திருக்கோயிலின் எச்சங்களையும் கல்வெட்டுக் களையும் அழகான ஒளிப்படங்களின் உதவியுடன் கண்முன் நிறுத்தினார்.
இவையனைத்தும் நிறைவடைந்த பின்னர் மிக நீண்ட பொருளார்ந்த ஏற்புரை நிகழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து தமிழர்தம் தொன்மையை வரலாற்று வெளிச்சத்தில் புரிந்து கொள்ள ஆய்வாளர்கள் ஆற்றிவரும் இன்றியமையாத அரும்பணியைப் போற்றிப் புகழ்ந்து பேசினார். பண்டைய காலத்தில் ஒவ்வொரு திருக்கோயிலும் வழிபாட்டுத் தலமாக மட்டும் இல்லாமல் வங்கியாக - நூலகமாக - பள்ளிக் கூடமாக - கலாசாலையாக - கலை நிறுவனமாக அருந் தொண்டாற்றியதையும் பண்டைய தமிழர் வரலாற்றில் கோயில்கள் இரண்டறக் கலந்திருந்ததையும் மிக விளக்கமாக எடுத்துரைத்தார். அவரது அழகான ஏற்புரையுடன் காலை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
மதிய நேர நிகழ்ச்சயாக அமைந்த கலந்துரையாடல் நடைபெற்ற வித்யா பவன் நிகழ்ச்சி துவங்கிய சில நிமிடங்களிலேயே அரங்கம் நிறைந்து காணப்பட்டது. கலந்துரையாடலில் விக்கிரமன் மற்றும் கௌரி இராம் நாராயணுடன் பொன்னியின் செல்வன் புதினத்தை நாடகமாகத் தயாரித்து மேடையேற்றிய குமரவேல், கல்கியில் பொன்னியின் செல்வனுக்கு ஓவியங்கள் வரைந்த இளைய தலைமுறை ஓவியர் திரு. பத்மவாசன், கல்கியின் இசை விமர்சனங்களைத் தனியே ஆய்வு செய்துள்ள திரு ஸ்ரீராம் ஆகியோரும் கலந்து கொண்டனர். வாசகர்களின் பல்வேறு கேள்விகளையும் பொன்னியின் செல்வன் பேரவை உறுப்பினர் திரு. முருகானந்தம் தொகுத்தளித்தார்.
கலகலப்பாகக் கலந்துரையாடலைக் கொண்டு சென்றனர் விக்கிரமனும் குமரவேலும். தனது வரலாற்று நாவல் படைப்பில் கல்கியின் எழுத்துக்களின் தாக்கத்தை விக்கிரமன் குறிப்பிட்டார். ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு விவகாரத்தைக் கல்கியவர்கள் நேர்த்தியாகக் கையாண்ட விதத்தை சிலாகித்தார்.
அமரர் கல்கியின் எழுத்துக்களையும் படைப்புக்களையும் ஸ்ரீராமும் கௌரியும் அலசினர். கல்கியின் மீது தாம் கொண்டிருக்கும் மிகப்பெரிய மரியாதையைக் குறிப்பிட்ட கௌரி, ஒரு சில விஷயங்களில் கல்கி சற்றே நெருடலான முரண்பாடுகளைக் கொண்டிருந்ததையும் விருப்பு வெறுப்பின்றித் தொட்டுக் காட்டினார்.
அடக்கமே உருவாக அமர்ந்திருந்த ஓவியர் சில்பியின் சீடர் திரு.பத்மவாசன், கல்கியின் மகத்தான புதினத்திற்குத் தாம் ஓவியம் வரைய நேர்ந்தது பெரும் நேர்ந்தது தனக்குக் கிட்டிய பெரும் பேரு என்று குறிப்பிட்டார்.