இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு...
 
* என் பெயரில் ஒரு போலி அறிக்கை
* தில்லித் தமிழ்ப் பள்ளிகள் - ஒரு கடிதம்
* டெல்லித் தமிழ்ப் பள்ளிகள் - சில நம்பிக்கைக் கீற்றுக்கள்
* DELHI TAMIL SCHOOLS NEED A SURGERY
* செல்வராஜன் கடிதம்
  மேலும்   
.
  மேலும்   
.
* தலைநகரில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள்..
* ஒரு விளம்பரமும் இரு பொய்களும்
* நாளை எங்கள் விரல்களில் கறுப்பு மை...
* என்னுடைய நேர்காணல்
* பாதுகா பட்டாபிஷேகம்
  மேலும்   
முகப்பு
|
எங்களைப் பற்றி
|
சந்தா
|
அறக்கட்டளை
|
பதிப்பகம்
|
v2images
|
தொடர்பு
 
 RSS Feeder
 
ஆகஸ்டு இதழ் , ஆகஸ்ட 2010
 
தலை வாசல்
 
Do you want to type in tamil, download this software
இந்த தமிழ் எழுதியை உங்கள் கணிணிக்குத் தரவிறக்கம் செய்து கொண்டால் நேரடியாக தமிழ் யூனிகோடில் தட்டச்சு செய்யலாம்
 
Can't view the contents correctly? Click here
 
Visitor Count
visitor counters
 
Sani Moolai
சனி மூலை
 
 
 
தலைநகரில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள்..


தமிழக முதல்வரின்  சரித்திரம் காணாத வகையிலான மிகக் குறுகிய கால உண்ணாநிலைப் போராட்டம்  (Fastest Fast on the earth) முடிவுக்கு வந்து உடன்பிறப்புக்கள் பேருந்துகள் உடைப்பதையும் வன்முறைகளைக் கைவிட்டதற்கும் மறுநாள் டெல்லியில் Revolutionary Democratic Front மற்றும் Delhi Tamil Students Union ஆகிய அமைப்புக்கள் இணைந்து டெல்லி கான்ஸ்டிட்யூஷன் கிளப் வளாகத்தில் உள்ள டெபுடி ஸ்பீக்கர் ஹாலில் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டித்து ஒரு பத்திரிகையாளர் கூட்டமும் பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.  International League of People Struggles அமைப்பின் துணைத் தலைவர் ஜி.என்.சாயிபாபா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

ஏ.பி.பர்தன், அருந்ததி ராய், இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரன் பொன்னம்பலம், சிவாஜிலிங்கம், காஷ்மீரின் சையத் ஷா கிலானி, பாராளுமன்றத் தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கிலானி, பெரியார் திராவிடர் கழகத்தின் விடுதலை ராஜேந்திரன் இன்னும் பலர் பேசப்போவதாக அறிவிப்பு வந்திருந்தது. 

பர்தன் தேர்தல் பணிகளில் எங்கோ சிக்கிக் கொண்டதாகவும் கைப்பேசி வழியாக அவருடைய பேச்சை இப்போது நீங்கள் கேட்கலாம் என்றும் அறிவித்து சில நிமிடங்கள் கைப்பேசியை மேடையில் குடைந்தார்கள்.   ஏதோ பிரச்னை.    அவருடைய பேச்சைக் கேட்கமுடியவில்லை. 

இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், காஷ்மீரின் சையத் ஷா
கிலானி,  நாகா அமைப்பின் செயலாளர் என்.வேணு(ஹ்) (அப்படித்தான் ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்கள்) மற்றும் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கூட்டத்தில்  கலந்து கொள்ளவில்லை.  வழக்கப்படி அருந்ததி ராய் கலந்து கொள்ளவில்லை. 

அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் மூர்த்தி செய்தியாளர் சந்திப்பைத் தொடங்கி வைத்தார்.  செய்தியாளர்கள் தங்களைக்  கேள்விகள் கேட்பதற்கு முன்பு தான் அவர்களை ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகச் சொன்னார்.  வட இந்திய ஊடகங்கள், காட்சி ஊடகங்களும்  சரி, அச்சு ஊடகங்களும் சரி, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை சரியான  வகையில் செய்திகளை வெளிக் கொண்டு வர எவ்வித முயற்சியும் எடுக்க வில்லையே அதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாமா? என்ற கேள்வியுடன் துவங்கினார்.  செய்தியாளர்கள் பகுதியில் இருந்து ஆழ்ந்த மெளனம் நீண்ட நேரத்துக்கு உறைந்துபோய் அந்தக் கூடத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது.  அதற்குப் பழி வாங்குவது போலவோ ஏனோ யாரும் எந்தக் கேள்வியையும் யாரிடமும் கேட்கவில்லை.   கீழே இருந்து எவ்விதக் கேள்வியும் வராததால் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தார்கள்.  அஸ்ஸாமியப் பேராசிரியர் அஜித் புயன், ஜஸ்டிஸ் அஜித் சிங் பெய்ன்ஸ், World Sikh News நிறுவனத்தின் பேராசிரியர் ஜக்மோகன் சிங், எஸ்.ஏ.ஆர்.கிலானி, இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பொன்னம்பலம், வராவர ராவ், பேராசிரியர் மூர்த்தி ஆகியோர் பேசினார்கள்.  எல்லோரும் சற்று உணர்ச்சி வசப்பட்டிருந்தார்கள்.  பத்திரிகையாளர் சந்திப்புக்கு என்று ஒரு சுற்று முடிந்ததும் இலங்கைத் தமிழர்கள் மேல் தொடுக்கப்படும் போர் பற்றிய குறும்படம் - இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட சலனப்படங்களின் தொகுப்பினைத் திரையிட்டார்கள். 


அந்தப் படத்தில் தொகுக்கப்பட்ட காட்சிகள் அடிக்கடி இணையத்தில் காண நேர்ந்தவையாக இரு
ந்தாலும் பெரிய திரையில் பார்த்தபோது ஒரு கணம் ஆடிப்போனது மனது.  அப்பாவி மக்கள் கண்களில் மரண பீதியுடன் ஓடும் ஓட்டமும் அபலைப் பெண்டிரின் அழுகுரலும் கைகால்கள் இழந்த நிலையில் குழந்தைகளும், அங்கங்கே வரிசைப்படுத்தப்பட்ட குழந்தைகளின் பிணங்களும், பதுங்கு குழிகளில் பாடங்கள் படிக்கும் பிஞ்சுகளும் - மனத்தில் பெருத்த வேதனை எழுந்த கணங்கள் அவை.  இருள்  சற்று வசதியாக இருந்தது.  வெளிச்சத்தில் அழுவதற்கு சற்று வெட்கமாக இருந்திருக்கும்.  மேடையில் இருந்த பலர் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.  பார்வையாளர்களிலும் நெஞ்சம் விம்ம, கனத்த மனங்களுடன்  ஈர விழிகளுடன் அமர்ந்திருந்தோம் பலரும்.   இருளுக்கும் இருளில் அமர்ந்திருந்த எங்களில் பலருக்கும் எவ்வித பாவனைகளும் இல்லை.   திரையிடலின் போது கனத்த மௌனம் கூடம் முழுதும் கசிந்து வழிந்து கொண்டிருந்ததை உணர முடிந்தது.

திரையிடல் முடிந்ததும் பேச்சாளர்கள் மீண்டும் பேச ஆரம்பித்தார்கள்.     தெலுங்குக் கவிஞர் வரா வர ராவின் பே
ச்சு மட்டும் நீண்ட நாட்களுக்கு மனதில் நிற்கும்.  வெள்ளந்தியான சிரிப்புடன் உண்மைகளை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார் ராவ்.  நம்முடைய தமிழனத் தன்மானத் தலைவர்கள் யாரேனும் அந்த அரங்கில் இருந்திருந்தால் கண்டிப்பாகத் தங்கள் கோவணம் முதல் உருவப்பட்டு   நிர்வாணமாக நிற்பது போல உணர்ந்திருப்பார்கள்.  தமிழர்களின் பிணங்களின் மீது நம் நாட்டின் ஓட்டுக்கட்சிகள் இந்தத் தேர்தலை நடத்தப் போகின்றன என்று தன் உரையைத் துவங்கிய ராவ், கருணாநிதியின் உண்ணாவிரதத்தை ஒரு அற்புத நாடகம் என்று வர்ணித்தார்.  காலைச் சிற்றுண்டி மற்றும் மதிய உணவு இரண்டையும் கைவிடாத ஒரு விநோதமான உண்ணாநிலையை கருணாநிதி மேற்கொண்டதாகத் தெரிவித்த போது பார்வையாளர் பகுதியில் இருந்து "The fastest fast"  என்று குரல் வந்தது. இங்கே ஒரு உள்துறை அமைச்சர் இலங்கையில் தமிழர்கள் மீது போர் நிறுத்தம் அறிவித்து இருப்பதாகவும்  அதை  இணையத்தில் அவர் பார்த்ததாகவும் சொல்கிறார்.   இதை ஒரு ராமசாமியோ கந்தசாமியோ சொல்லவில்லை.    இந்த நாட்டின் உள்துறை அமைச்சர் முதல்வருக்குத் தெரிவிக்கிறார்.  அதைத் தொடர்ந்து தன் உண்ணாநிலைப் போராட்டத்தை அவர் கைவிடுகிறார்.  இதை விட நல்ல நாடகம் இருக்க முடியாது என்றார் ராவ்.  அதே நேரத்தில் இலங்கையின் ராணுவத் துறையின் செயலாளர் தமிழர் பகுதிகளில் இலங்கையின் படைகளை இன்னும் பின் வாங்கிக் கொள்ள வில்லை என்று தெரிவிக்கிறார்.  புலிகளும் பிரபாகரனும் முழுதாக சரணடைவது வரை விடப்போவதில்லை என்றும் ஒரு அறிக்கையை விட்டு இருக்கிறார் இராணுவ அமைச்சரும்.  (அதற்குத் தகுந்தாற்போல, மக்கள் தொலைக்காட்சியில் மழை விட்டாலும் தூறல் நிற்காது என்று தமிழக முதல்வர் சொன்னதை விமர்சனம் செய்ததாக யாரோ சொன்னார்கள்).  சரி.  மீண்டும் ராவ் பேச்சுக்கு வருகிறேன்.    இலங்கைப் போரில் காயமடைந்த சுமார் 150 இந்தியப் படை வீரர்கள் சென்னையின் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதே இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான ஒரு நிலையை இந்திய அரசு எடுத்திருப்பதற்கான சான்று என்றார். 

ஒரு நிருபர் நீங்கள் அப்படி சொல்வதற்கு நிரூபணங்கள் ஏதேனும் உண்டா?  என்று கேட்டார்.  அதற்கு பேராசிரியர் மூர்த்தி குறுக்கிட்டு சென்னையின் நந்தம்பாக்கம் பகுதியின் ராணுவ மருத்துவமனையில் அந்த 150 வீரர்களும் சிகிச்சை பெற்று வருவதாவும் அதிகம் சந்தேகம் இருந்தால் ஜுனியர் விகடன், நக்கீரன் போன்ற புலன் விசாரணை இதழ்களின் நிருபர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றும் இடை மறித்தார்.

பேராசிரியர் மூர்த்தி தன்னுடைய உரையில் இலங்கையில் பௌத்தர்களின் ஆட்
சி.  இந்திய தேசியக்கொடியில் அசோகச் சக்கரம்.  இந்தியாவின் சின்னம் பௌத்தத்தையும் அகிம்சையையும் ஏற்றுக்கொண்ட அசோகரின் சிங்கங்கள்.  ஆனால்நடைமுறை செயல்பாடுகளோ முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இருக்கிறது.  நேரு பதவி ஏற்ற கையோடு 4000 பேர் இனக்கலவரத்தில்  கொல்லப்பட்டார்கள்.  இது எத்தகைய முரண்பாடு?  தமிழக அரசியல்வாதிகளும் தங்களின் அரசியல் வசதிக்காக ஈழத்தமிழர்களை ஆதரிப்பது போன்ற நாடகங்களைத் தான் அரங்கேற்றுகிறார்கள்.  சினிமா வசனங்களை எழுதியவர்கள் மற்றும்  நடிக நடிகையர்களின் கைகளில்  தமிழக அரசியல் மாட்டிக்கொண்டு அல்லல் படுகிறது.  ஜெயலலிதா திடீரென்று தனி ஈழம் என்று அறிவிக்கிறார்.  அவர் நல்ல நடிகை.  கருணாநிதி ஒரு உண்ணாநிலைப் போராட்டத்தை நாடகமாக நடத்திக் காட்டியிருக்கிறார்.  அவர் நல்ல சினிமா கதாசிரியர்.  இவைபோன்ற ஓட்டு வேட்டைகளைத் தவிர்த்து தமிழர்கள் மீது எங்காவது  ஈரம் கசிந்த ஒரு பார்வை கிட்ட   வாய்ப்பு  இல்லையா?  பாலஸ்தீனர்களுக்கு அடுத்து இன்று உலக அளவில் அல்லல் படுவது நம்முடைய தமிழினம்தான்.  ஒட்டுமொத்த நாடகத்துக்குமான ஒத்திகை இங்கே டெல்லியில்தான் பார்க்கப்படுகிறது.    ஊடகங்கள் பிரபாகரனையும் புலிகளையும் மையமாக வைத்துத்தான் இலங்கைப் பிரச்னையை அணுகுகின்றன.  அங்கே குண்டு வீச்சாலும் துப்பாக்கி குண்டுகளாலும் ரசாயனப் போரினாலும் மடியும் தமிழனின் நிலையை யாரும் எண்ணிப் பார்ப்பது இல்லை.  இதை அனைவருக்கும் எடுத்துச் சொல்லவேண்டும் என்கிற ஒரு சிறுமுயற்சிதான் இவைபோன்ற கூட்டங்கள் என்று பேசிய அவருடைய உரையை எல்லோரும் மிகக் கவனமாகக் கேட்டனர்.

வேறு பலரும் பேசினார்கள்.  World Sikh News ஆசிரியர் ஜக்மோகன் சிங் தன் உரையில் பகத்சிங் தீவிரவாதியென்றால் பிரபாகரனும் தீவிரவாதிதான் என்றார்.  பஞ்சாப் என்கிற மாநிலத்துக்குப் பல ஆண்டுகளாக தனக்கெனத் தனியான தலைநகர் கிடையாது.  இவை போன்ற பிரச்னைகளும் அதிக அளவில் யாருடைய கவனத்துக்கும் வரவில்லை என்றார்.

இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பொன்னம்பலம் ஒன்றும் விசேஷமாக எதுவும் பேசவில்லை.  ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பும் அவருடைய பேச்சில்தான் இருந்தது. 

அதேபோல கிலானியின் பேச்சும் அத்தனை எடுபடவில்லை என்று சொல்லலாம்.

கூட்டத்தி்ன் இறுதியில் இன்னொரு திரைப்படத்தைத் திரையிட்டார்கள்.  ஆங்கிலத் துணை எழுத்துக்களுடன் ஈழப்போராட்டம் பற்றிய கவல்களை மிகவும் தெளிவாகத் தந்தது அந்தப் படம்.  வட இந்திய அரசியல்வாதிகள் அனைவருக்கும் திரையிட்டுக் காண்பிக் வேண்டிய படம் அது.  அரசியல்வாதிகள் மட்டுமல்ல.  இங்குள்ள பொதுமக்களுக்கும் அந்தப் படத்தைத் திரையிட வேண்டும்.  முடிந்தால் நம்முடைய தானைத்தலைவர்கள் தன்மானத் தலைவர்கள் பலருக்கும் இந்தப் படத்தை ஒருமுறை இந்த மாணவர்கள் திரையிடலாம்.

தலைநகரில் ஈழத்துப் பிரச்னைகள் குறித்து மிகவும் தெளிவாகவும் திட்டமிட்ட வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் இது.  Delhi Tamil Students Union மாணவர்கள் மிகவும் அற்புதமாக உழைத்து இந்த ஏற்பாட்டை செய்திருந்தார்கள்.  ஈழத்தில் தமிழர்கள் படும் இன்னல்களை மிகவும் தெளிவான வகையில் சிறு கையேடாக ஆங்கிலத்தில் தயாரித்து அச்சிட்டு வழங்கினார்கள்.  டெல்லியின் எந்தப் பெரிய தமிழ் அமைப்பும் இவர்களுக்கு எந்த வகையிலும் உதவ முன்வரவில்லை.  ஆனாலும் மனம் தளராது மிக அற்புதமான வகையில் ஏற்பாடு செய்த அவர்களுடைய சமூகப் பிரக்ஞை மற்றும் அணுகுமுறை நெகிழ்ச்சி அளித்தது.

துரதிருஷ்டவசமாக தலைநகரின் ஊடகங்களும்  இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான முக்கியத்துவம் தரவில்லை என்றுதான் தோன்றுகிறது. இந்தக் கூட்டம் நடந்த அதே நேரம் மைய அரசு சார்பாக வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர் மேனன் கலந்து கொண்ட செய்தியாளர்கள் கூட்டத்துக்கு இங்கிருந்து பரபரப்புடன் ஓடினார்கள் நிறைய செய்தியாளர்கள்.

மறுநாள் அதாவது 29 ஏப்ரல் 2009 அன்று ஜந்தர் மந்தர் பகுதியில் Ecumenical Christian Forum
for Human Rights - ECFoHR என்னும் அமைப்பு பல மதத்தலைவர்களை அழைத்து ஒரு கூட்டம் மற்றும் ஒரு நாள் எதிர்ப்பு உண்ணாநிலை போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.  திருச்சி ஜோசப் கல்லூரி, சென்னை சி.எஸ்.ஐ டயோசிஸ் அமைப்பில் இருந்தும் பல பாதிரியார்களும் இறை சகோதரிகளும் கலந்து கொண்டார்கள்.  நிறைய பேர் பேசினார்கள்.  நிறைய நேரம் பேசினார்கள்.  சுவாமி அக்னிவேஷ் பேசினார்.  அடிப்படை பிரச்னை பற்றிய புரிதல் மிகவும் குறைந்த நிலையில் புலிகள் மேற்கொண்ட வன்முறை பற்றி கண்டித்துப் பேசினார். இலங்கை அரசின் வன்முறை பற்றி அவர் எதுவும் பேசவில்லை.  பொதுவாக வன்முறையை யார் ஆதரித்தாலும் தவறு என்பது போலப் பேசினார்.  தனி ஈழம் கேட்பது மிகவும் தவறு என்று அறிவுரை செய்தார்.  அவரைத் தவிர பிரபலத் தலைவர்கள் நடுப்பகல் வரை யாரும் வரவில்லை.

இந்தக் கூட்டத்தில் பலர் பாடினார்கள்.  கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.  அவர்கள் பாடிய முறையைச்
சொன்னேன்.  ரொம்பவும் சிரமப்பட்டு கொஞ்ச நேரம் இருக்க முடிந்தது. சென்னை சி.எஸ்.ஐ. பாதிரியார்கள் மைக்குக்கு வரும் வரை.  பறை எல்லாம் எடுத்து வந்தார்கள்.   பாடுகிறேன் என்று வந்த சாமியார்கள்  கோஷம் போடத் துவங்கினார்கள்.  கொஞ்சம் கொஞ்சமாக கோஷம் சாபமாக உருமாறத் துவங்கியது.  ராஜபக்சேவே - குடும்பத்தோடு அழிந்து போவாய் போன்ற அவர்களின் உடைக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத சாபங்களை கோஷங்களாக உருமாற்றி தடுமாற வைத்தார்கள்.  உச்ச கட்ட காமெடியாக

மத்திய அரசே மத்திய அரசே - ராஜபக்சேவைக் கைதுசெய்

என்று அதிரடியான கோஷத்தை முழக்கினார்கள். 

சிதம்பரம் பாவம்.  இந்த நேரம் தேர்தலில் தீவிரமாக இருப்பார்.  ராஜபக்சேவை கைது செய்ய அவருக்கு நேரம் கிடைக்குமா என்று தெரியாது.    மேலும் அவருக்குக் கிட்டும் கொஞ்ச நேர அவகாசத்தில்  இணையத்தில் செய்திகளைப் படித்து இலங்கையில் என்ன நடக்கிறது என்று  தமிழக முதல்வருக்கும் இந்த நாட்டுக்கும் தெரிவிக்க வேண்டும்.  கோஷத்தின் கோரிக்கைகள் வேறு வேறு திசைகளில் மாறிக்கொண்டு இருந்தது.

இனி இருந்து அங்கே நேரத்தை வீணாக்க வேண்டாமே என்று ஒவ்வோருவராக இடத்தைக் காலி செய்யத் துவங்கினார்கள்.  மதியத்துக்கு மேல் என்ன நடந்தது என்று தெரியவில்லை.  தை விட வேறு யாராவது இன்னும் காமெடியாக எதையாவது செய்திருப்பார்களா என்றும் தெரியவில்லை.  இந்தக் கூட்டத்தில் தில்லித் தமிழ்ச் சங்கமும் பங்கேற்பதாக அறிவிப்பு வந்தது.  ஆனால் தில்லித் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த யாரும் அந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

யாரும் பேசி விளக்காததை, யாரும் எழுதி விளக்காததை அப்படிப் பேச முடியாததை, எழுதி விளக்க முடியாததை தமிழ் மாணவர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் திரையிட்ட சலனக்காட்சிகள் செய்தன.

தலைநகர் தமிழ் மாணவர்களின் தீவிரம் அதீத நம்பிக்கை அளிக்கிறது.  அவர்களுடைய செயல் திறன் பெருமை அளிக்கிறது.  அவர்களால் நிறையச் செய்ய முடியும். 

நன்றாகவும் செய்ய முடியும்.

01 மே 2009

சி.டி.சனத்குமார்
     
 
 
Find your life partner through the biggest matrimonial portal on earth..