03 மே 2009 தினமலர் நாளிதழில் திமுக கட்சி சார்பில் ஒரு முழுப்பக்க விளம்பரத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். கலை ஞர் ஆட்சியில் கலை வளர்த்தோம் - கலாச்சாரம் காத்தோம் என்று விளம்பரம் கலக்குகிறது. (கலாச்சாரம் என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை பண்பாடு இல்லையோ? திமுக விளம்பரத்தில் ஆரியத் தமிழா?) அந்த விளம்பரத்தில் திமுக ஆட்சியில் நடந்த கலாச்சார (அவர்கள் பாஷையில்) வளர்ச்சி தொடர்பான இவர்களின் சாதனைகளைப் பட்டியல் இட்டு இருக்கிறார்கள். தைத்திங்கள் முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டு நாள் (இது சாதனையில் அடங்குமா? இதுகுறித்து ஏதோ வழக்கு கூட நிலுவையில் இருக்கிறதாமே) என்று தொடங்குகிறது இந்தப் பட்டியல். மாமன்னர் மருதுபாண்டியர்க்கு மணிமண்டபம் அது இது எல்லாம் சரி. இரண்டு விஷயங்கள் மட்டும் கொஞ்சம் இடித்தன.
தலைநகர் தில்லியில் அய்யன் திருவள்ளுவர்க்கு அழகுச் சிலை.
தில்லித் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் கலையரங்கம்.
தில்லிக்கு வெளியே இருந்து இந்த விளம்பரத்தைப் பார்ப்பவர்களுக்கு ஏதோ திமுக கட்சியும் அவர்கள் ஆட்சியும்தான் இந்த இரண்டையும் டெல்லியில் சாத்தியமாக்கியது போன்ற ஒரு தோற்றத்தைத் தரும் இந்த விளம்பர வரிக்கும் உண்மைக்கும் எத்தனை இடைவெளி என்பதை தில்லியில் வசிக்கும் தமிழர்கள் அறிவார்கள்.
திருவள்ளுவருக்கு அழகுச் சிலை வைத்ததில் தமிழக அரசுக்கும் திமுகவுக்கும் அதன் தலைவர் கருணாநிதிக்கும் எந்த அளவு தொடர்பு உள்ளது என்பதை இங்கு பல காலங்களாக வசிக்கும் பெரியவர்களுக்கு அதிகம் தெரியும்.
தமிழகத்தின் முன்னாள் அவைத்தலைவர் மற்றும் அமைச்சராக இருந்த அமரர் க.ராஜாராம் மற்றும் டெல்லியில் வள்ளவர் கலைமன்றத்தின் செயலாளர் ரூஸ்வெல்ட் ஆகியோர் எடுத்த முயற்சியில் டெல்லியில் இராமகிருஷ்ணபுரம் பகுதியில் ராணுவ அமைச்சகம் மற்றம் பிற அமைச்சகங்களின் அலுவலகங்கள் இயங்கும் வெஸ்ட் பிளாக் வளாகத்தில் திருவள்ளுவருக்கு ஒரு சிலையை நிர்மாணித்தர்கள். வள்ளுவர் கலை மன்றம் நிர்மாணித்த இந்தச் சிலை 1975ல் முன்னாள் குடியரசுத்தலைவர் ஃபக்ருதீன் அலி அஹமது அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சி.சுப்பிரமணியம் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. சிலை திறப்பு விழாக் கல்வெட்டில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியின் பெயர் இருந்தும் அந்த நிகழ்ச்சியில் ஏனோ அவர் கலந்து கொள்ள வில்லை. திறப்பு விழாக் கல்வெட்டில் இன்னும் பெயர் இருக்கிறது. சி.சுப்பிரமணியத்தையும் இவர்கள் அழைத்ததால் கருணாநிதி கோபித்துக் கொண்டு அரசியல் ரீதியான காரணங்களால் வரவில்லை என்று இங்குள்ள பெரியவர்கள் சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு சரியானது என்று தெரியாது.

இது ஒருபுறம் இருக்க, இந்தச் சிலை நிறுவிய ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு எவ்விதப் பராமரிப்பும் இன்றி, இருள் மண்டியதும் அந்தப் பகுதியில் போகிற வருகிறவர்கள் எல்லாம் சிலையைச் சுற்றி மலஜலம் கழிப்பதையும் மற்ற கெட்ட காரியங்கள் செய்வதையும் ஒரு மௌன சாட்சியாக நின்று பல ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருந்தார் வள்ளுவர். 1998ம் வருடம் என்று நினைக்கிறேன். அந்த வளாகத்தில் தமிழ்ச் சங்கம் மார்க் சாலைப்புறமாக திருவள்ளுவர் சிலை முற்றிலும் பார்வையில் இருந்து மறைந்து போகும் வண்ணம் ஒரு பொதுக்கழிப்பறையை நகராட்சி கட்டியது. அந்தப் பொதுக்கழிப்பறையில் இருந்து வழியும் கழிவு நீர் அந்தச் சிலையைச் சுற்றித் தேங்கி நின்று வள்ளுவரின் சிலையருகில் யாரையும் நெருங்கவிடாமல் செய்து கொண்டிருந்தது. உடைந்த மதுக்குப்பிகளும் உபயோகித்த கருத்தடைச் சாதனங்களும் அந்த வளாகமெங்கும் இறைந்து கிடக்கும். யாரும் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். எப்போதாவது பேச்சைத் துவங்குவார்கள். சிறிது நாட்களுக்குப் பிறகு சந்தடி அடங்கிவிடும் தமிழகத்தின் பலகட்சிகளில் இருந்தும் செயல்மறவர்கள் மற்றும் தன்மானத் தலைவர்கள் இங்கே அமைச்சர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகக் கோலோச்சியும் யாருக்கும் இந்த வள்ளுவருக்கு ஒரு விமோசனம் தரவேண்டும் என்கிற எண்ணம் பல ஆண்டுகளாக எழுந்த பாடு இல்லை. சென்ற இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக எல்லோரும் இதைப் பற்றிப் பேசி, எழுதி சர்ச்சை கிளம்பத் துவங்கியது. அப்போதைய தமிழ்ச் சங்கச் செயலர் முகுந்தனும் நானும் இணைந்து எல்லா ஊடகங்களிலும் இது குறித்த செய்தி வருவதற்கு ஏற்பாடு செய்தோம்.
பிப்ரவரி 2008ல் டெல்லி முதல்வர் க்ஷீலா தீக்ஷித் வடக்கு வாசல் இசைவிழாவுக்குக் கலந்து கொள்ள வந்தபோது எங்கள் விழா மேடையில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர், செயலர் மற்றும் நானும் டெல்லி முதல்வரிடம் நிலையை எடுத்துச் சொன்னோம். அவர் உடனே ஆவன செய்வதாகத் தெரிவித்தார். ஏறக்குறைய எல்லா தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் அமைச்சர்களிடமிருந்தும் கடிதங்கள் பெறப்பட்டு டெல்லி முதல்வருக்கு அனுப்பி வைத்து ஏப்ரல் 2008ல் வள்ளுவர் சிலை தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. எனவே அந்த இடமாற்றத்துக்கு மிகவும் முக்கியமான உதவியைச் செய்தவர் டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்.
தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்துக்கு வள்ளுவர் சிலையை இடம் மாற்றிய பிறகு அதைத் தமிழக முதல்வர் கருணாநிதிதான் திறந்து வைக்கவேண்டும் என்று மிகவும் பிடிவாதமாக இருந்தனர் அப்போதைய செயற்குழுவினர். முதல்வரை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும் நோக்கத்தில் மட்டுமே தமிழ்ச் சங்கத்தின் பணத்தை பல்லாயிரக்கணக்கில் செலவு செய்து வானவூர்திப் பயணங்கள் மேற்கொண்டு அவ்வப்போது அவரை அழைக்கச் சென்று வந்தனர். மறக்காமல் தினசரிகளிலும் மற்ற இதழ்களிலும் அதனை விளம்பரப்படுத்திக் கொண்டனர். ஓரிருவர் முதல்வருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தங்களுடைய செல்வாக்கின் அடையாளமாக சில இடங்களில் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றும் வதந்தி நிலவியது. அது வதந்தியாக இருந்தாலும் உண்மையின் சுவடுகள் சில இடங்களில் தென்படத்தான் செய்தன.
வேறு ஏதோ காரியத்துக்காக டெல்லி வந்த தமிழக முதல்வர் சில மணித்துளிகளை ஒதுக்கி இந்தச் சிலையைத் திறந்து வைத்து தில்லித் தமிழ்ச் சங்க நிர்வாகத்துக்குப் பெருங்கருணை புரிந்தார்.
திமுக கட்சிக்கும் அதன் தலைவர் கருணாநிதிக்கும் டெல்லியில் நிறுவப்பட்டுள்ள வள்ளுவரின் சிலைக்கும் உள்ள தொடர்பின் உண்மை நிலை இதுதான்.
வள்ளுவரின் ராசி என்னவென்றால், திமுக காரர்கள் இப்போது உரிமை கொண்டாடுவது போலவே, இந்தச் சிலையின் இடமாற்றத்துக்கு எந்த வகையிலும் எள்ளளவும் தொடர்வு இல்லாத செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சில உறுப்பினர்களின் பெயர்களை எவ்வித வெட்கமும் இல்லாது தங்கள் பெயர்களைப் பொறித்த கல்வெட்டினை திருவள்ளுவரின் பின்புறம் பதித்து வைத்திருக்கிறார்கள். அந்த செயற்குழுவில் வள்ளுவர் சிலை இடமாற்றத்துக்காக அதிகம் உழைத்தது அப்போதைய பொதுச் செயலடப மட்டுமே. அந்த நிர்வாகக் குழு பொறுப்பில் இருந்த ஆண்டினைக் கூடக் குறிக்காமல் ஏதோ இவர்களே கல்தோ்ன்றி மண்தோன்றாக் காலம் முதல் தமிழ்ச் சங்கத்தில் இருந்து வருவது போன்ற ஒரு தோற்ற மயக்கம் தரும் கல்வெட்டு இது. அது சரி, இவர்கள் இவர்களுடைய அளவில் வெட்கமில்லாமல் இதைச் செய்து கொண்டால் திமுக கட்சி தன்னளவில் கூச்சமில்லாமல் தினசரியில் இப்படித் தவறாக விளம்பரம் கொடுத்துக் கொள்கிறது.
அடுத்து திருவள்ளுவர் கலையரங்கத்துக்கு வருவோம். தில்லித் தமிழ்ச் சங்கம் தற்போது இயங்கி வரும் இடத்தை அந்தக் காலத்தில் விலைக்கு வாங்குவதற்குத் தன்னுடைய மகளின் திருமணத்துக்காக வைத்திருந்த தொகையை எடுத்து அந்த இடத்தை வாங்கியவர் அமரர் கே.வி.வெங்கடாசலம் அவர்கள். அவருடைய நூற்றாண்டு சென்ற ஆண்டு வந்து போனது. அதே போல தமிழ்ச் சங்கம் பாலு என்று தலைநகர் தமிழர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட பாலு அவர்கள். இப்போது தலைவராக உள்ள தமிழ்ச் சங்கம் கிருஷ்ணமூர்த்தி, புலவர் விஸ்வநாதன் ஆர்.எஸ்.வெங்கடேசன், பொறியாளர் ராமாமிருதம், பி.வி.நரசிம்மன், தமி்ழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலர்கள் ஆல் இந்தியா ரேடியோ ரங்கராஜன் மற்றும் வெங்கடகிரி, இன்னும் பலரும் திருவள்ளுவர் கலையரங்க நிர்மாணத்துக்கு ஓடாய்த் தேய்ந்து உழைத்தவர்கள்.
80களின் துவக்கத்தில் பனி அடர்ந்த குளிர் நாளின் காலை வேளைகளில் டெல்லி தமிழ்நாடு இல்லத்தைக் கடந்து செல்லும் போது விறைக்கும் அந்த நடுக்கத்தில் தலையில் மஃப்ளர் சுற்றிக்கொண்டு தமிழ்நாடு இல்லத்தின் எதிரில் உள்ள பிளாட்பாரத்தில் தமிழ்ச் சங்கம் கிருஷ்ணமூர்த்தி, புலவர் விஸ்வநாதன், ரங்கராஜன், வெங்கடகிரி ஆகியோர் தவம் இருப்பார்கள். இதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். தமிழ்நாடு இல்லத்தி்ல் தங்கியுள்ள பிரமுகர்களைப் பார்த்து வள்ளுவர் கலையரங்கத்துக்கு நிதி உதவவி கேட்பதற்கு அப்படி நின்றிருப்பார்கள். திருவள்ளுவர் கலையரங்கம் நிர்மாணிப்பதற்கு ஆன செலவு சுமார் ஒரு கோடி ரூபாய். இதில் அப்போது தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது தமிழக அரசு சார்பாக அளித்த தொகை பத்து லட்சம். அதுவும் அப்போது மைய அமைச்சராக இருந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திடம் தனிச் செயலராக இருந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஜி.பாலச்சந்திரன் அவர்களின் முனைப்பில், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் சென்னை சென்ற போது முதல்வரின் இல்லத்துக்குச் சென்று அந்த உத்தரவில் கையெழுத்து வாங்கி வந்தார்.
திருவள்ளுவர் கலையரங்கம் நிர்மாணித்த பின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அந்த அரங்கத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் கருணாநிதி. ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தத் திருவள்ளுவர் கலையரங்கத்துக்கு தமிழக அரசு அளித்த தொகை பத்து லட்சம். இதில் தமிழக அரசோ அல்லது திமுக கட்சியோ அல்லது அதன் தலைவர் கருணாநிதியோ தாங்கள் அந்தக் கலையரங்கத்தை நிர்மாணித்ததாக உரிமை கொண்டாடுவதில் ஏதாவது நியாயம் இருக்க முடியுமா?
எனவே, தினமலர் இதழில் திமுக கட்சி வெளியிட்ட விளம்பரத்தில் இந்தப் பத்தியின் துவக்கத்தில் குறிப்பிட்ட டெல்லியில் உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் திருவள்ளுவர் கலையரங்கத்துக்கும் திமுகவுக்கும் அதன் தலைவர் கருணாநிதிக்கும் உள்ள தொடர்பு பற்றிக் குறிப்பிட்டுள்ள அந்த வரிகளுக்கும் உண்மைக்கும் தொடர்பு ஏதுமில்லை. இது டெல்லி தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். மற்றவர்களும் தெரிந்து கொள்வதற்காக இந்தப் பதிவு.
வேறு அரசியல் நோக்கமோ சார்போ எனக்கு இல்லை.
இந்தப் பொய்யான விளம்பர வரிகளுக்கு டெல்லித் தமிழ்ச் சங்கத்தின் தற்போதைய நிர்வாகம் எப்படி எதிர்வினையாற்றும் என்பது தெரியாது. அவர்கள் மெளனமாக இருந்தாலும் தவறு ஒன்றுமில்லைதான். அரசியலில் எல்லாமே சகஜம் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். தேர்தல் நேரத்தில் எத்தனையோ பொய்களைச் சொல்லலாம் என்று எழுதப்படாத விதி ஒன்று உள்ளது. அந்த விதிமுறைகளில் இந்த வரிகளையும் சேர்த்துக் கொள்ளலாம் இல்லையா?
04 மே 2009 |