இப்போது செய்தியாளர்கள் மட்டுமல்லாது யாரைப்பார்த்தாலும் செருப்பைத் தூக்கிக் கொண்டு அலைகிறார்கள். வலைத்தளங்களில் சென்றால் வர்ஜாவர்ஜியம் இல்லாமல் இன்னார் இங்கு வந்தால் இதனால் அடியுங்கள் என்று கோரிக்கை - எச்சரிக்கை - அறிவுரை - வேண்டுகோள் - அறைகூவல் இன்னும் என்னேன்னமோ விடுகிறார்கள். 13ம் தேதி இறுதிக்கட்டத் தேர்தல் முடிந்து விடும். அதற்குப் பிறகு அதிகம் யாரும் வந்து தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதுவரை யாராவது எதற்காவது எங்காவது வந்து கொண்டுதான் இருப்பார்கள்.
நம்முடைய சரித்திரத்தில் யாராவது ஒரு மாவீரன் ஏதாவது ஒரு மன்னன் மீதோ அல்லது ஜமீன்தார் மீதோ அல்லது வெள்ளைக்காரத் துரை அல்லது துரைசானி மீதோ எறிந்து இருக்கலாம். ரொம்பவும் நோண்டிப்பார்த்தால் அப்படி ஏதும் கண்டிப்பாகத் தென்படாமல் போகாது. இந்திய அரசியலில் இந்தச் செருப்பு எறியும் தொழில் 1907ல் கொல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலேயே துவங்கிவிட்டது என்று ஒரு வலைத்தளத்தில் படித்தேன். டல்ஹவுஸியின் நாட்குறிப்புக்களில் இதுபற்றிய தனிப்பக்கம் ஒன்று உள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் லோகமான்ய திலகருக்கு எதிராகப் பெரும் கூச்சல்கள் கிளம்பியதாகவும் கைகூப்பி நின்ற திலகரை நோக்கிப் பலரும் உரக்கக் கூச்சல் போட்டுக் கொண்டு இருந்ததாகவும் திடீரென்று கூட்டத்தில் பறந்து வந்த காலணி ஒன்று வெகு வேகமாகப் பயணித்து அங்கே மேடையில் நின்றிருந்த ஸர் ஃபிரோஸ் மேத்தாவின் மேல் இறங்கியதும் போலீசார் கூட்டத்தின் மேல் காட்டுத்தனமாகத் தடியடி நடத்தியதையும் உள்ளுக்குள் ஏக சந்தோஷமாகப் பதிவு செய்திருப்பார் டல்ஹவுஸி மாமா.
ஆங்கில வலைத்தளங்களில், அதுவும் மேலை நாட்டு வலைத்தளங்களில் கொஞ்ச நாட்களாக அநியாயம் செய்து கொண்டிருக்கிறார்கள் வெள்ளைககார துரைமார்கள். ஜார்ஜ் புஷ் மீது ஈராக்கில் ஒரு செய்தியாளர் காலணியை வீசிய போது பல இடங்களில் அதைவைத்து பல்வேறு வகையிலான வீடியோ விளையாட்டுக்களை வலைத்தளங்களில் உலவிட்டார்கள். எங்கள் ஊரில் ப.சிதம்பரத்தின் மீது ஜர்னைல் சிங் காலணியைத் தூக்கி எறிந்ததும் அளவே இல்லாமல் பீலா விடத் துவங்கிவிட்டார்கள். அதுவும் ரொம்ப அநியாயமாக. காலணி சிதம்பரம் உட்கார்ந்த இடத்தில் இருந்து நன்கு தள்ளி விழுந்தது. அதை கணிணி வித்தைகளால் வலுக்கட்டாயமாக சிதம்பரத்தின் முகத்துக்கு நேராக நிறுத்தி சந்தோசப்பட்டுக் கொண்டார்கள். அதை எறிநத சர்தார்ஜிக்குக் கூட அத்தனை சந்தோஷம் இருந்திருக்காது. இந்தியாவில் எல்லோரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து யார் மீதாவது ஏதாவது ஒரு காரணத்துக்காக செருப்பு வீசியே ஆக வேண்டும் என்று அலைந்து திரிவது போல வலைத் தளங்களில் எழுதி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வெள்ளைக்காரத் துரைமார்கள் விடும் சரங்களுக்கு அளவே கிடையாது. அந்தக் காலத்து விட்டலாச்சாரியார் படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது எங்கள் ஊர் ராஜா தியேட்டரில் ஏதோ தரையெல்லாம் பாம்பு ஊர்வது போலவே இருக்கும். அதற்குக் குறைவில்லாமல் நாற்காலியில் இருந்து காலைத் தொங்கவிடாதவாறு பாம்பு விட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்தத் துரைமார்கள்.
இந்தியாவில் இப்போது தேர்தல் நடப்பதால் பல இடங்களி்ல் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு யாரும் செருப்பு அணிந்து கொண்டு வரக்கூடாது என்று தடைவிதித்து இருக்கிறார்களாம். சிதம்பரத்தின் மீது செருப்பு எறிந்ததும் கோவில் போன்ற இடங்களில் கூட செருப்பு அணிந்து கொண்டுவரத் தடை இருக்கிறதாம். நிறைய பத்திரிகையாளர் கூட்டங்களில் செருப்பு அணிந்து கொண்டு வருவதற்குத் தடைவிதித்து விட்டார்களாம். இப்படி எல்லாம் மூலைக்கு மூலை மேலை நாட்டினரின் வற்றிப்போன பீலாக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
நம் ஆட்களுக்கும் அதற்குக் குறை வைக்கவில்லை. மேலை நாட்டில் கதை இப்படிப் போகிறது என்றால் பல தமிழ் வலைத்தளங்களில் எடு செருப்பை - போடு நாலு அதாலே என்கிற அளவில்தான் நிறைய பேர் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். ரொம்பவும் வசதியான தூரங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கும் சிலர் தமிழ் நாட்டுக்கு இன்னார் வந்தால் செருப்பால் அடியுங்கள். இன்னார் வந்தால் செருப்பு மாலை போடுங்கள் போன்ற அன்புக்கட்டளைகளை விடுத்த வண்ணம் இருக்கிறார்கள். தேர்தல் முடியும் வரை இது தொடரும். தேர்தல் முடிந்த பின்னாலும் தொடரலாம்.
நம் ஊரில் எதற்கெடுத்தாலும் தன்னைச் செருப்பாலடித்துக் கொள்ளணும் என்றோ யாரையாவது செருப்பால் அடிப்பேன் என்றோ நேரமும் சுதந்திரமும் கிடைக்கும் போதெல்லாம் சலித்துக் கொள்வார்கள். எதிராளியும் கெட்ட மனநிலையில் இருந்தால் ஒழிய அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
உதாரணத்துக்கு நானே அடிக்கடி புலம்புவது உண்டு. இந்தத் தலைநகர் தமிழர்களை நம்பி ஜூகல்பந்தி என்னும் சங்கீதக் கதைத் தொகுப்பைக் கொண்டு வந்ததற்கும், கிடைத்த காசில் எதையாவது மிச்சம் பிடிக்காமல் ஆயிரம் பிரதிகள் வடக்கு வாசல் இலக்கிய மலர் அச்சிட்டதற்கும் என்னை நானே செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும் என்று பலமுறை எதிரில் வந்தவர்களிடம் எல்லாம் சலித்துக் கொள்வது உண்டு. ஆனால் இதில் ஒரு வசதி இருக்கிறது. என்னை நானே அடித்துக் கொள்ள எந்த சட்ட ஆலோசனையும் தேவையில்லை. யாருடைய தயவும் தேவையில்லை.
பிரச்னை அடுத்தவர்கள் மீது எறியத் தூண்டுபவர்கள் மற்றும் தூண்டப் படுபவர்களிடம்தான். அதனால் நம் ஊரில் செருப்பு, வடக்கில் ஷூ போன்றவற்றால் யாருக்காவது பட்டாபிஷேகம் நடத்தத் துடிப்பவர்களுக்கு வசதியாக சில சட்ட ஆலோசனைகளைப் பதிந்து வைத்தால் வசதியாக இருக்கும் என்று தோன்றியது. வசதி என்றால் அடிப்பவர்களுக்கும் அடிவாங்குபவர்களுக்கும் சேர்த்துத்தான். எனவே அடுத்தவர்களை அடிக்கவோ அடுத்தவர்கள் மீது காலணிகளை வீசவோ தயாராக இருப்பவர்களுடைய வசதிக்காக அவர்களுடைய வழிகாட்டுதலுக்காக இருக்கட்டுமே என்று ஒரு வழக்கறிஞர் நண்பரிடம் இது குறித்துக் கேட்டேன்.
யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் - ஒருவர் மீது காலணிகளை வீசி எறிவது இந்திய தண்டனைச் சட்டப்படி அது தண்டனைக்குரிய குற்றச் செயல்பாடாகும். ஒருவரை அவமதிக்கும் வகையில் யாரேனும் அப்படி ஒரு காரியம் செய்தால், அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அப்படி யாரையாவது அவமதிக்கும் வண்ணம் காலணியை அடுத்தவர்கள் மீது வீசி எறிகிறவருக்கு இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
யாராவது யார் மீதாவது அவரை அவமதிக்கும் வகையிலும் குற்றம் இழைக்கும் நோக்கிலும் செயல்பட்டால் இந்திய தண்டனைச் சட்டத்தின் 355வது பிரிவின் படி அவர் மீது வழக்குப் பதிவு செய்யலாம். ஆனால் இதில் ஒரு விஷயம் இருக்கிறது. காலணி வீசப்பட்டவர் தன்மீது தன்னை அவமதிக்கும் நோக்கில் காலணியை வீசிய நபர் மீது காவல்துறையிடம் முறையீடு செய்ய வேண்டும். இது கருத்தில் கொள்ளத் தகாத குற்றமாக (என்ன எழவு இது? Non-cognizable Offence-ஐ வேறு எப்படி மொழிபெயர்ப்பு செய்வது?) இல்லாத காரணத்தால் குற்றவியல் நெறிமுறைச் சட்டத்தின் அடிப்படையில் காலணி வீசிய ஒருவரை காவல்துறை நேரடியாகக் கைது செய்ய முடியாது. செருப்பாலடிபட்டவர் அல்லது காலணியைப் பரிசாகப் பெற்றவர் வீசியவர் மீது அல்லது செருப்படியைப் பரிசளித்தவர் மீது ஆதாரத்துடன் குற்றம் சாட்டி முறையீடு செய்தால் ஒழிய அவரைக் கைது செய்ய முடியாதாம்.
முறையீட்டின் பெயரில் நீதிபதியின் ஆணையின் அடிப்படையில் காலணி வீசியவரைக் கைது செய்யலாம். அபராதம் கூடிய அல்லது அபராதம் இல்லாது இரண்டாண்டுகள் அல்லது அதற்கும் மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அப்படிக் கைது செய்யப்பட்ட நபரை பிணையிலும் விடுவிக்க சட்டத்தில் வழிமுறை உள்ளது என்று சொல்கிறார் என்னுடைய வழக்கறிஞர் நண்பர்.
நமக்கு நீண்ட சரி்த்திரம் உள்ளது. பூகோளம் உள்ளது. பாரம்பரியம் உள்ளது. எனவே, இனி யார் மீதாவது எதி்ர்ப்பினைக் காட்ட செருப்புக்களை வீச நினைப்பவர்கள் இந்த சட்ட நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ராகவன் தம்பி
11 மே 2009
|