17.2.2010
அன்புடையீர்,
வணக்கம்.
“தை பிறந்தால் வழிபிறக்கும்” என்பார்கள். அதனை உறுதிப்படுத்தும் விதமாக தாங்கள் பிப்ரவரி 2010 இதழில் எழுதியுள்ளதுபோல் “தில்லித் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் பற்றிய ஒளிக்கீற்று” வெளிவரத்துவங்கியுள்ளது. இது தங்களது முயற்சிக்கும், தங்களோடு தோள்நின்று செயல்பட்டவர்களின் உழைப்பிற்கும் கிட்டிய ஒரு சிறிய பரிசுதான்.
தாங்கள் கடந்த அக்டோபர் 2009 முதல் ‘தில்லி தமிழ்ப்பள்ளிகளின் அவலநிலை’ பற்றி “வடக்கு வாசல்” இணையதளம் மூலமாகவும், மாத இதழ் மூலமாகவும் தொடர்ந்து எழுதி வந்துள்ளதன் பயனாக மேற்படி பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தான்தோன்றித் தனமாகவும் எதேச்சாதிகாரமாகவும் செயல்பட்ட செயற்குழுவினரும் அவர்களால் முன்மொழியப்பட்ட அனைத்து வேட்பாளர்களும் கடந்த 14.2.2010 அன்று நடைபெற்ற தேர்தலில் ஒட்டு மொத்தமாகத் தூக்கி எறியப்பட்டுவிட்டனர் என்ற மகிழ்ச்சிகரமான செய்தி கிட்டியுள்ளது மனதுக்கு மிகவும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இதற்குமுன்னர் தில்லித் தமிழ்ச்சங்கத்திலும் தங்களது இதுபோன்ற முயற்சி பயனளித்துள்ளது இங்கு குறிப்பிடப்படவேண்டிய ஒன்றாகும்.
முந்தைய நிர்வாகிகளுடன் தேர்தலுக்கு முந்தைய இரவுவரை மிகநெருக்கமாகக் கூடிக்குலாவிய பல சுயநலவாத பச்சோந்திகள் அவர்களுக்காக ஓட்டுவேட்டையில் இறங்கி படுதோல்வி கண்டபின்னர் தங்களின் நிறத்தை ஒரே இரவில் மாற்றிக்கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் நெருங்கி உறவாடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதை நாம் தற்போது காணும்போது இவர்களது தரங்கெட்ட செயலைக்கண்டு இவர்களது தரத்தை எவ்வாறு எடைபோடுவதென்று புறியவில்லை? இவர்களிடம் தரத்தை எதிர்பார்க்கலாமா? அது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகாதா? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது ஐயா!
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் ஒருசிலரே முன் அனுபவம் பெற்றவர்களாகத் தோன்றினாலும் ஏனையோர்கள் இதற்குமுன்னர் நடைபெற்ற தேர்தலில் முந்தைய நிர்வாகத்தினருடன் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியதன் விளைவாக தற்போது அவர்களை எதிர்த்து நின்று வெற்றிபெற்றுள்ளதால் அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய வாய்ப்புகள் மேலோங்கியுள்ளது மனதுக்கு ஆறுதல் அளிப்பதாக இருப்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாகச் செய்த நிதி முறைகேடுகளையும் நிர்வாக ஊழல்களையும் விசாரணை செய்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை அரசு அதிகாகள் மூலமாகவும் குற்றவியல் நீதிமன்றங்களின் மூலமாகவும் எடுப்பதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து தங்களைப்போன்றவர்களும், 1970 முதல் 1990 வரை நிர்வாகத்தில் இருந்தவர்களும் அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் மேற்கொள்ள முன்வந்தால்தான் இத்தகைய காளான்களை நிரந்தரமாகக் களைந்தெறிய முடியும். இதில் சிறிதளவு காலதாமதம் செய்தாலும் இந்தக் காளான்கள் மிகமிக வேகமாகப் பரவி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடனும் விரைவாகவும் செயல்படவேண்டிய கட்டாயம் உள்ளது.
இவற்றிற்கு மேலாக ஏழை எளிய தமிழ்க்குடும்பங்களின் குழந்தைகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாகக் கிடைக்காத சிறந்த கல்வி நமது தமிழ்ப்பள்ளிகள் மூலம் கிட்டுவதற்காகத் தேவையான கல்வித் தகுதியுடைய சிறந்த ஆசியர்களை உடனடியாகத் தேர்வு செய்து நியமித்து அக்குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதிலும் நமது கவனத்தைச் செலுத்தவேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். இந்த வேள்வியில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்ற வேண்டுகோளுடன் இதனை நிறைவு செய்கிறேன்.
நன்றி.
வி. பார்த்தசாரதி
5அ/207-208, WEA
கரோல்பாக், புதுதில்லி-110005
தொ.பேசி. 011-65497809
கைப்பேசி: 9871301678
|