இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு...
 
டிசம்பர் இதழ் 2008 , டிசம்பர் 2008
 
 
முகப்பு
|
எங்களைப் பற்றி
|
சந்தா
|
அறக்கட்டளை
|
பதிப்பகம்
|
v2images
|
தொடர்பு
Vadakku Vasal
 
எங்களைப் பற்றி
சரவணன் பார்வையில்...

 

வடக்கு வாசல்' கலை _ இலக்கியம் _ பண்ணிசை _ அரசியல் _ அறிவியல் சார்ந்த மாத இதழ்.  இந்த உள்ளடக்கப் பகுப்பிலிருந்தே இதன் இயங்கு தளத்தையும் இலக்கியத் தகுதியினையும் உணரலாம்;

      11 செப்டம்பர் 2005 முதல்; வடக்கு வாசல்' இதழ் தனது இலக்கியப் பயணத்தைத் துவக்கியது பதிவு பெறாத இதழாக செப்டம்பர் 2006 வரை வெளிவந்தது.  Registrar of News papers of india '' அலுவலகத்தில் பதிவு பெற்று அக்டோபர் 2006 முதல் வெளிவந்து கொண்டுள்ளது.  ஆகஸ்ட் 2008 இதழோடு வடக்கு வாசலுக்கு மூன்று வயது நிறைவடைகின்றது.  இதுவரை தங்குதடையின்றி தொடர்ந்து 36 இதழ்கள் வெளிவந்துள்ளன.  இவற்றின் வழியாக 24 நேர்காணல்கள், 173 கட்டுரைகள், 73 கதைகள், 266 கவிதைகள் வாசகரை வந்தடைந்துள்ளன.

 

வாழ்க்கை வாசல்:


      காலச்சுவடு', சொல்புதிது' போன்ற தரம் மிக்க இதழ்களில் வெளிவந்த நேர்காணல்கள் பரவலாக வாசகர் கவனத்தைக் கவர்ந்தன காரணம் அவை அளவில் பெரியவை _ பொருளாழமிக்கவை _ பாசாங்கற்றவை.  அவற்றுக்கு நிகரானவை வடக்கு வாசல்' இதழில் வெளிவரும் நேர்காணல்கள்.

 
      பேட்டியைப் பயன்படுத்திக் கொண்டு புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிடும் நபர்களை ஒருபோதும் வடக்கு வாசல் பேட்டி கண்டதில்லை.  சமூகத்தின் மீது அக்கறை கொண்டு புதிய சிந்தனைகளைப் பொதுவாக்கிப் பகிர்ந்து கொள்ளும் களமாகப் பேட்டியைப் பயன் படுத்துவோரை மட்டுமே வடக்கு வாசல்' பேட்டி கண்டுள்ளது.

      வடக்கு வாசல்' இதழில் இடம்பெற்றுள்ள பேட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையை உள்ளது போலவே வாசகர்களுக்குக் காட்டுவார்கள் _ தனது சிந்தனைகளை ஒரு விவாதப் பொருளாகவே வாசகர்கள் முன் வைப்பார்கள் _ தனது துறையில் தன்னல்சாதிக்க முடியாத விஷயங்களை வருங்கால சந்ததிகளின் கவனத்துக்குக் கொண்டு வருவார்கள்.  தான் சாதித்த விஷயங்களைத் தன்னடக்கத்தோடு தயங்கியபடியே வெளிப்படுத்துவார்கள்.  இத்தகைய தன்மைகளே நேர்காணலை ஓர் உன்னதப் படைப்பாக மாற்றி விடுகின்றன.  வடக்கு வாசல்' நேர்காணல்கள் அத்தகைய தன்மையினைப் பெற்றுள்ளன.

      வடக்கு வாசல்' நேர்காணல்களில் இடம் பெறுவோர் பெரும்பாலும் இலக்கியச் சிற்றிதழ்கள் பேட்டிகாணத் தவறியவர்களே.  அவர்களின் பேட்டி வடக்கு வாசலில் இடம் பெறுவது இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் கிடைத்த கொடை _ யதார்த்தா கி.பென்னேஸ்வரனுக்குக் கிடைத்த வெற்றிகளில் ஒன்று.

      நேர்காணல்களுள் ஆகச் சிறந்தவை மூன்று ஒன்று ஏ.ஆர்.ராஜாமணியின் நேர்காணல் இரண்டு சி.டி.சனத் குமாரின் நேர்காணல்.  மற்றொன்று அருட் செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தின் நேர்காணல்.  முன்னது இலக்கிய அக்கறை அடுத்தது கல்வியியல் சார்ந்த சமூக அக்கறை பின்னது இலக்கியம் மற்றும் சமூக அக்கறை தழுவியது.

 
இசை வாசல்:

இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக வடக்கு வாசல் பல்வேறு வகையில், தலைப்பில் இசை சார்ந்த நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தி, அவை தொடர்பான செய்திகளை விரிவாக இதழில் பதிவு செய்துள்ளது.

      அவற்றுள் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் இளவேனில் இசைவிழா, மாரி இசை விழா, பக்தி இசைவிழா, நினைத்தாலே இனிக்கும் இசை நிகழ்ச்சி ஆகியனவாகும்.  வடக்கு வாசல் ஏற்பாடு கல்கியின் பொன்னியின் செல்வன்' குறித்த வைகோவின் உரை தமிழர்கள் உள்ள இடங்களில் எல்லாம் வெகுவாக பேசப்பட்டது. 

இவற்றை நிகழ்த்த உறுதுணையாக நின்ற நண்பர்களின் உடலுழைப்பும் நிதிபலமும் பிரம்மிப்பூட்டுவன.  இசைத் தொண்டில் தன்னை அர்ப்பணித்த தமிழ் இலக்கிய இதழ்' என்ற பெருமை வடக்கு வாசலுக்கு உண்டு.
 
கட்டுரை வாசல்:

வடக்கு வாசலை மூன்று தூண்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.  அவை ய.சு.ராஜன், ராகவன் தம்பி, சி.டி.சனத் குமார் ஆகியோர் எழுதும் கட்டுரைகளேயாகும்.

      ய.சு.ராஜன் சிந்தனைச் சிதறல்கள்' கட்டுரைகளில் அறிவின் சுடர் பற்றி எரிந்தபடியே இருக்கும்.  குழந்தைக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுக்கும் ஒரு தந்தையின் தொனி இருக்கும்.

      சி.டி.சனத் குமார் எழுதும் கல்வியியல் சார்ந்த கட்டுரைகளில் அறிவுரைகள் அள்ள அள்ளக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.  ஓர் ஆசிரியரின் தொனி இருக்கும்.

      ராகவன் தம்பியின் சனிமூலை' கட்டுரைகளில் சமூக நடத்தைகளால் ஏற்பட்ட வயிற்றெரிச்சல் நகைப்பாகமாறி வரிகளாக விரிந்திருக்கும்.  ஒரு நண்பரோடு உரையாடும் தொனி இருக்கும். 

ஸஞ்ஜயனின் கட்டுரைகளில் தேசிய அக்கறை அழுத்தமாகப் பதிவாகியுள்ளது.  சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்' உத்தியாலும் தெளிவுபட மொழிதல்' தன்மையாலும் ஸஞ்ஜயனின் கட்டுரைகள் வாசகர் மனத்தில் இடம் பிடித்து விடுகின்றன.

      இவர்களது கட்டுரைகள் தவிர, சிறந்த கட்டுரைகளாக மூன்றினைக் கருதுகின்றேன். 1) பிலிப்பைன்சின் தேசப்பிதா' ஜோல் ரிசல் பற்றி டாக்டர் ம.நாராயணன் எழுதிய ஒரு விளக்கின் கதை', 2) 60 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தைப் பற்றி எஸ்.வி.ராமகிருஷ்ணன் எழுதிய சுதந்திரம் வந்த நாளில் தமிழ்நாடும் தமிழரும்', 3) பாரதியார் இறுதி உரையாற்றிய ஈரோடு கருங்கல்பாளையம் நூலகம் பற்றி விஜய்சாய் எழுதிய நான் சாகாதிருப்பேன் காண்பீர்' ஆகியனவாகும்.

      இம் முன்றும் கருத்தாழமும் கச்சிதமும் உடையவை.  சிறந்த, சுவாரசியமான கட்டுரை எழுதுவது எப்படி? என்ற வினவுக்குப் பதிலாகவும் எடுத்துக்காட்டாகவும் கூறத் தக்கவை.  பாவண்ணன் கவிஞர்களைப் பற்றி எழுதிய கட்டுரையும் சரவணன் சிறுகதை எழுத்தாளர்கள் பற்றி எழுதிய கட்டுரையும் விரிவும் ஆழமும் புதுமையும் கொண்டவையாக இருந்தும் வாசகர் கவனத்தை ஈர்க்கவில்லை என்பது வியப்பாகவே உள்ளது.

 
கதை வாசல்:

பொதுவாசிப்புக்கு ஏற்ற கதைகளையே பெரும்பான்மையாக வடக்கு வாசல் வெளியிட்டுள்ளது.  அவற்றுள் தனித்து நிற்பவை ஐந்து கதைகள்.  அவை எஸ்.ராமகிருஷ்ணனின் சேர்ந்திசை', நரசய்யாவின் ஈஸ்வரரோ ரஷது', ராகவன் தம்பியின் முறையீடு', பா.திருச்செந்தாழையின் படையல்', தீரனின் நாயம்' ஆகியனவாகும்.  சேர்ந்திசை' புனைவின் சாத்தியக்கூறுகள் அனைத்தையும் உள்ளடக்கியது.  ஈஸ்வரோ' ரஷது', முறையீடு' ஆகிய கதைகள் இயல்புடைய காட்சிப் பின்னல்களால் வாசகர் மனத்தைக் கவர்கின்றன.  படையல்' கதையில் நாட்டார் வழக்காறு சார்ந்த நம்பிக்கைகள் மிளிருகிறது. நாயம்' கதை மொழி நடையால் சிறப்புற்றுள்ளது.

      மொழி பெயர்ப்புக் கதைகளைப் பொறுத்தவரை அவற்றின் மூலத்தைப் படிக்காமல் கருத்துக் கூறுவது தப்பிதமாகி விடலாம்.  மொழி பெயர்ப்பின் வழியாக நம்மை வந்தடையும் கதையில் பொருள் மாற வாய்ப்பு இல்லை.  ஆனல் அழகு திரிபு பெற்றிருக்கும்.  ஆதலால் வடக்கு வாசலில் வெளியாகியுள்ள மொழி பெயர்ப்புக் கதைகளைப் பற்றிக் கருத்துக்கூற விரும்பவில்லை.
 
கவிதை வாசல்:

  கவிதைகளை வெறும் பக்க நிரப்பிகளாக மட்டும் பயன்படுத்தாமல் வடக்கு வாசலில் கவிதைகளின் தரமறிந்து தனிப்பக்கம் ஒதுக்குவதும் அல்லது தொகுப்பாய் தொடர் பக்கங்களில் வெளியிடுவதும் சமகாலக் கவிதைகளையும், கவிஞர்களையும் ஊக்குவிப்ப தாகவும் உயர்வுக்கு வழிவகுப்பதாகவும் உள்ளன.

      வெ.சந்திரமோகனின் அகதி', ஜோதி பெருமாளின் மரம்வெட்டிகள்', அகஸ்டஸின் உறுத்தல்' ஆகிய கவிதைகளும் மா.காளிதாஸ் மற்றும் க.அம்சப்பிரியாவின் அனைத்துக் கவிதைகளும் பாராட்டத் தக்கனவாக உள்ளன.  பிறர் எழுதியுள்ள கவிதைகள் படிக்கத் தக்கனவாக மட்டும் உள்ளன.  க.அம்சப் பிரியாவின் கவிதைகள் தமது தரம் மற்றும் தகுதியால் தொகுப்பாக வெளிவர வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.
 
அஞ்சலி வாசல்:
 

      வடக்கு வாசலில் வெளிவந்துள்ள அஞ்சலிக் குறிப்புகள் வெறும் அறிவிப்புகளாக இருப்பதில்லை.  தன்னளவில் தனிக் கட்டுரைகளாகவே அமைந்துள்ளன.  மறைந்தவர்களின் கலை _ இலக்கியப் பணி, சமூகப் பணி, தனி நபர் நடத்தை போன்றவற்றை அளவிட்டு அவரைக் காலத்தில் இருத்தும் பொறுப்பினை ஏற்று இப்பகுதி செயல்படுகிறது.

      சுப்புடு, லா.ச.ரா, சுந்தர ராமசாமி, வல்லிக் கண்ணன், ஆர்.கெ.மூர்த்தி, சுஜாதா, யஷ்பால், பிஸ்மில்லா கான் பற்றியும் சனிமூலைப் பகுதியில் வெளிவந்துள்ள சி.சு.செல்லப்பா மற்றும் சிங்காரவேலர் ஆகியோர் பற்றியும் எழுதப் பெற்றுள்ள மறைந்தோர் நினைவுக் குறிப்புகள்' தொகுக்கப்பட்டு தனி நூலாக வெளியிடப்பட்டால் அது ஓர் நல்ல ஆவணமாகத் திகழும்.

 
அறிவுரை வாசல்:

குறிப்பிடத் தகுந்தவர்களின் பிறந்த நாள்; மற்றும் நினைவு நாள் குறித்து புகைப்படத்துடன் கட்டம் கட்டி செய்தி வெளியிடப்படுகின்றது.  இது இதழுக்கு வடிவழகையும் வாசகர் மறதிக்கு மருந்தாகவும் உள்ளது.  கூடுதலாக அவர்கள் பற்றிய குறுங்கட்டுரையும் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.

      நடந்தவைகள்' என்ற தலைப்பில் வெளியிடப்படும் குறிப்புகள், வழியாக நாடெங்கிலும் நடந்த நிகழ்வுகள் பற்றிய அறிதல் பரவலாக வாசகர் கவனத்திற்குக் கிடைக்க வழிவகுக்கின்றன.  இவை, விடிந்தால் உலகம் அழிந்துவிடும் என்ற பயத்தோடு இரவோடிரவாக எழுதித் தள்ளப்படும் செய்திகளாய் அமைந்து விடுகின்றன.  ஒரு நாளிதழில் வெளியிடப்படும் செய்தியாகவே அவை நின்று விடுகின்றன.

      இலக்கிய இதழில் வாசகர்; எதிர்பாப்பது வேறு.  அங்கு நிகழ்ந்தவை, பேசப்பட்டவை, வின எழுப்பப்பட்டு விடைபெறப்பட்ட செய்திகள் போன்றன விரிவாகக் கூறப்பட்டால் தான், நிகழ்வுக்குத் தொலை தூரத்தில் உள்ள வாசகரும் அதனைத் தான் கலந்து கொண்டு அனுபவித்ததைப் போன்ற தொரு உணர்வினைப் பெறவியலும்.  விரிவாக எழுத வடக்கு வாசல் இடம் தர மறுப்பதில்லையே.  பிறகென்ன, விரிவாக எழுதலாமே.

      வடக்கு வாசலின் 36 இதழ்களில் 8 இதழ்களில் மட்டுமே படைப்பாளர்கள் அல்லது கலைஞர்கள் புகைப்படம் அட்டைப் படத்தில் இடம் பெற்றுள்ளன.  மற்ற 28 இதழ்களிலும் காக்கா, குருவி, மரம், செடி, கொடி இவைகளே வெளியிடப் பெற்றுள்ளன.  கலை _ இலக்கிய இதழ்கள் தனது அட்டைப்படத்தில் படைப்பாளர்கள் அல்லது கலைஞர்கள் புகைப்படத்தினை வெளியிடுவதே சிறப்பு.  எந்த வேளாண்மை இதழும் உயிரியல் சார்ந்த இதழும் படைப்பாளர்கள் அல்லது கலைஞர்கள் புகைப்படத்தினை வெளியிடுவதில்லையே!

      வடக்கு வாசலின் ஆறு இதழ்களில் மட்டுமே அட்டைப்படம் சிறப்பாக அமைந்துள்ளது.  கோமல் புகைப்படம், சுந்தரராமசாமி புகைப்படம்,  நித்திய மற்றும் சுதாரகுநாதன் புகைப்படங்கள், இலங்கை நடனக் கலைஞர் புகைப்படம், ப.முத்துசாமி வரைந்த ஓவியம், தாய்லாந்து படகில் காத்திருக்கும் திபெத்திய பெத்தத் துறவிகளின் புகைப்படம் ஆகியவற்றை அட்டைப் படமாகப் பெற்று வெளிவந்த இதழ்கள் வடக்கு வாசல் இதழின் கலை _ இலக்கியத் தரத்தினை மிகுவித்துள்ளன.

      படைப்புகளை வெளியிடும்போது அந்தந்தப் படைப்பாளரின் புகைப்படம், தொலைபேசி எண் மற்றும் இணைய அஞ்சல் முகவரி போன்றவற்றையும் வெளியிட்டால், அது படைப்பாளர்களுக்கும் பிற இதழாளர்களுக்கும் வாசகர்களுக்கும் தொடர்புக்கு உதவியாக இருக்கும்..

 
மதிப்பீட்டு வாசல்:

வணிக நோக்கில் வடக்கு வாசலை மதிப்பிட்டால், வடக்கு வாசலின் பலம் அரசியல், அறிவியல் சார்ந்த செய்திகள், அட்டைப்படம், புகைப்படங்கள் (ஜாநி சுரேஷ்)  மற்றும் இதழ் வடிவமைப்பு என்றும், பலவீனம் இலக்கியம், பண்ணிசை சார்ந்த செய்திகள் மற்றும் இதழில் வெளியிடப்படும் ஓவியங்களும் இன்னும் சில....'  என்று தீர்மானிக்கலாம்.

      இலக்கிய நோக்கில் வடக்கு வாசலை மதிப்பிட்டால், வடக்கு வாசலின் பலம் சிறுகதைகள் _ அரசியல் சாராத கட்டுரைகள் _ நவீனக் கவிதைகள் _ புத்தக மதிப்புரைகள் மற்றும் ஒட்டுமொத்த நடை' என்றும், பலவீனம், பரவலாக அறியப்பட்ட படைப்பாளர்கள் எவரும் தொடர்ந்து இந்த இதழில் எழுதாமை _ நடந்தவை' பகுதியின் விஷயக்குறைவு _ இன்னும் சில...' என்றும் தீர்மானிக்கலாம்.

 
சாதனை வாசல்:

      ஓர் இதழ் விரிந்த வாசகர் வட்டத்தினைப் பெற, அந்த இதழ் பரவலாக அறியப்பட்ட மற்றும் மூத்த படைப்பாளர்களின் பங்களிப்பைக் கொண்டிருத்தல் அவசியம்' என்ற தமிழ் இலக்கியச் சிற்றிதழ் விதியினை உடைத்தெரிந்த பெருமை வடக்கு வாசலுக்கு உரியது.  இது வடக்கு வாசலின் சாதனைகளில் ஒன்று.

      பரவலாக அறியப்பட்ட இமையம், எஸ்.ராமகிருஷ்ணன், பாவண்ணன், இரா.முருகன், சுப்ரபாரதிமணியன் போன்ற கதைஞர்களும் விக்கிரமாதித்யன், கலாப்ரியா, குட்டிரேவதி, சல்மா, தேவதேவன், சுகுமாரன் போன்ற கவிஞர்களும் வாஸந்தி, நாஞ்சில் நாடன், பி.ஏ.கிருஷ்ணன், இளைய அப்துல்லா, வெங்கட் சாமிநாதன், சு.கி.ஜெயகரன் போன்ற கட்டுரைக்காரர்களும் வடக்கு வாசலில் தொடர்ந்து எழுதவில்லை.  இவர்கள் எல்லோருக்கும் வடக்கு வாசல்; முதல் இதழின் தலையங்கத்தில் இதழாசிரியர் யதார்த்தா கி.பென்னேஸ்வரன் நன்றி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  அப்படியிருந்தும் இவர்கள் வடக்கு வாசலைக் கைவிட்டது ஏன்?

      வடக்கு வாசலின் வழியாக புதிய படைப்பாளர்கள் நான்குபேர் உள்நுழையும் அல்லது நுழைக்கப்படும் தருணத்தில் பழைய படைப்பாளிகள் இரண்டு பேர் வெளியேறி விடுகின்றனர் அல்லது வெளியேற்றப் படுகின்றனர்.  இதற்கு யார், எவை காரணம்? இடப் பற்றாக்குறையா _ வாசகர் வட்ட விரிவாக்க உத்தியா? இப்புறக்கணிப்பு நிகழ்வது வடக்கு வாசல் பக்கமா அல்லது பழைய படைப்பாளிகள் பக்கமா? பின்னது என்றே கருதுகின்றேன்.   வடக்கு வாசல் எவரையும் எப்போதும் எதற்காகவும் புறக்கணிப்பதில்லை.

      வடக்கு வாசல் வழியாகத் தமிழ் இலக்கியத்திற்குள் வந்தவர்களும் இளம் படைப்பாளர்களும்தான் வடக்கு வாசலில் எழுதி வருகிறார்கள்.  வடக்கு வாசலின் இன்றைய இலக்கியத் தகுதிக்கும் வாசகர் வட்ட விரிவிற்கும் அவர்களே காரணம்.  ஊர்த்தேர் நகர இளந்தாரிகளின் கைவலிமையும் மூத்தோரின் ஆலோசனையுமே காரணம்.  அதுவே இங்கும் நிகழ்ந்துள்ளது எனக் கருதுகிறேன்.

      வடக்கு வாசல் இதழினை நடத்துவதிலுள்ள துயர் பற்றி இதழாசிரியர் யதார்த்தா கி.பென்னேஸ்வரன் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

      "நான் வடக்கு வாசல் என்னும் ஒரு புலிவாலைப் பிடித்து வைத்திருக்கிறேன்.  அந்தப் புலிவால் என்னை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் செய்து கொண்டிருக்கிறது.  ஒவ்வொரு மாதமும் என் தலைமேல் ஏறிவரும் கடன்சுமை என் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கிறது.  பல இடங்களில் இருந்தும் பல தமிழ் அறிஞர்களிடமிருந்தும் கலைஞர்களிடமிருந்தும் எனக்கு வரும் தொலைபேசி வாழ்த்துக்களும், கடிதங்களும் என்னுடைய கடன் சுமையை மறக்க வைத்து அந்த வாழ்த்துக்கள் அளிக்கும் உற்சாகம் என்னை மீண்டும் சற்று எழுந்து நிற்க வைக்கிறது.  விருப்ப ஓய்வு பெற்று கிடைத்த அத்தனை பணத்தையும் வடக்கு வாசலில் கரைத்துவிட்டேன்.  இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்கிற அளவில் நம்பிக்கையை மட்டும் நெஞ்சில் தாங்கி வடக்கு வாசலில் நிற்கிறேன்.'' (வடக்கு வாசல் பிப்ரவரி 2008, பக்கம் 11)

      மிகக் குறைந்த விளம்பரத்தோடும் சந்தாக்களின் தயவோடும் (சந்தா உதவி என்பது குறைந்தபட்ச நன்கொடையேயன்றி வேறில்லை) சொந்தப் பணத்தைத் தெரிந்தே இழந்தும் இதழ் விலையில் மாற்றமின்றி 48 பக்கங்களைக் கொண்டு, மாதம் தவறாது மொத்தம் 36 இதழ்களை வெளியிட்டுள்ளமை என்பது யதார்த்தா கி.பென்னேஸ்வரனின் சாதனையே.

      மொத்தத்தில், வடக்கு வாசல்' தமிழ் இலக்கிய உலகிற்கு இன்னொரு தலைவாசல்.

 

வடக்கு வாசல் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் இணைய தள துவக்க விழாவில் Dr.APJ.Abdul Kalam அவர்கள் ஆற்றிய உரை
www.abdulkalam.com